இலங்கை வங்கியின் வெளிநாட்டு செலவாணி இருப்பு தொடர்பில் விளக்கமளிப்பு

இலங்கை வங்கியில் வெளிநாட்டு செலவாணி இருப்பு தொடர்பில் எதுவித பிரச்சினையும் இல்லையென்று அந்த வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே தெரிவித்தார்.

வங்கியில் போதுமான வெளிநாட்டு நாணயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு நாணய கடன் விண்ணப்பம் குறித்து எதுவித சிக்கலும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு நாணய கடன் விண்ணப்பத்திற்கும் வங்கியின் வெளிநாட்டு நாணய இருப்பிற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று அவர் கூறினார்.

கொவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு பெருந்தொகை அமெரிக்க டொலர் செலவிடபப்டுகிறது. மேலும் எரிபொருள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் இறக்குமதிக்கும் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது.

நாட்டின் எதிர்காலத்தை சிறப்புற அமைக்கும் நோக்கிலேயே வங்கியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று காஞ்சன ரத்வத்தே மேலும் தெரிவித்தார். நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு கண்டு, ஆக்கபூர்வமான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை வங்கி எப்போதும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏற்றுமதி துறையை ஊக்குவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் விசேட ஏற்றுமதி பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை வங்கியின் தலைவர் காஞ்சன ரத்வத்தே மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களம்