கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 இளைஞர்கள் நோர்வூட் பொலிஸாரால் கைது

தனிமைப்படுத்தும் சட்ட விதிகளை மீறி கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று  நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் போட்ரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விளையாட்டு மைதானத்தில் தனிமைப்படுத்தும் சட்ட விதிகளை மீறி அயரபி மற்றும் போட்ரி தோட்டங்களைச் சேர்ந்த 20 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்ட சுமார் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கால் பந்தாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 40 இளைஞர்கள் ஒன்று கூடியிருந்ததாகவும் பொலிஸாரை கண்டு ஏனையவர்கள் ஓடி தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றுப்போட்டியினை ஒழுங்கு செய்த நபர் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன் பல மரண சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார பிரிவினரும் பாதுகாப்பு பிரிவினரும் அறிவித்துள்ள போதிலும் அதிகமானவர்கள் அதனை பின்பற்றுவதில்லை.

இதனை கட்டுப்படுத்துவதற்காகவே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதே வேளை கைது செய்யப்பட்டவர்களை நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எது எவ்வாறான போதிலும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையினை உணர்ந்து சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது எம் அனைவரினதும் கடமையாகும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.