ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிசாலினியின் சரீரத்துக்கான 2ஆம் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றது.

இதற்காக நீதிமன்றினால் நியமிக்கப்பட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரிகளின் குழுவினால் இன்று காலை 8.30 முதல் மாலை 5.15 வரையில் சுமார் 9 மணித்தியாலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் சரீம் முதலில் சீ.ரீ. ஸ்கேன் செய்யப்பட்டு, உள்ளக காயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டன.

பின்னர் சரீரத்தின் உடற்கூற்று மாதிரிகள் பெறப்பட்டு பல்வேறு இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பரிசீலனைகள் அனைத்தும் நிறைவடைந்து இறுதி அறிக்கை கிடைக்கப்பெறும் வரையில், சிறுமியின் சரீரம் பேராதனை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கும்.

காவல்துறையினரும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் அதேநேரம், 2ஆம் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை இடம்பெறும் என்று காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.