அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பம்!

அஸ்ட்ராசெனொகா முதலாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு, நாளை முதல் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கொவிட் பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை மற்றும் நாளை மறுதினம் 02 ம் திகதி கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிலும், நாளை மறுதினம் 02 ம் திகதிபத்தரமுல்ல தியத்த உயன பூங்காவிலும் அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், 728, 460 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ள நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 540,000 பேருக்கு இரண்டாம் செலுத்துகைக்காக குறித்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக பயன்படுத்தப்படவுள்ளன.

அவர்களில் 526, 000 பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ளனர்.

அந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் பின்னர், எஞ்சிய தடுப்பூசிகளை கேகாலை மாவட்ட மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசிகள் அடுத்த சனிக்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.