1.1 பில்லியன் ரூபா நஷ்டம் நிலக்கரிக் கொள்வனவுக்காக

2015ஆம் ஆண்டு நிலக்கரிக் கொள்வனவுக்காக கேள்விப்பத்திரங்கள் கோரும்போது நிலக்கரியின் அளவு தொடர்பில் குறிப்பிடப்படாமையினால் 1.1 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக நேற்றையதினம் (06) நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவின் (கோப்பு) விசாரணைகளில் புலப்பட்டது. அத்துடன், லங்கா நிலக்கரி கம்பனி நீண்டகால விலைமனுக் கோரல் நடைமுறைகளுக்குச் செல்லாமல் கொள்முதல் பொறிமுறைக்கு அப்பாற் சென்று குழுகிய கால நடைமுறையின் கீழ் நிலக்கரியைக் கொள்வனவு செய்திருப்பதும் இதன்போது தெரியவந்தது.

லங்கா நிலக்கரி கம்பனி மேற்கொள்ளப்பட்ட நிலக்கரிக் கொள்வனவு தொடர்பில் விசாரிப்பதற்கு குறித்த கம்பனியின் உயர் அதிகாரிகள் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன் நேற்று அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விசாரணையின்போதே மேற்குறிப்பிட்ட விடயங்கள் வெளிப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கூட்டம் நேற்று (06) நடைபெற்றது.

இதில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான நாளக கொடஹேவா, சரத் வீரசேகர, அஜித் நிவாட் கப்ரால், பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரவணக்க, இரான் விக்ரமரட்ன, ஜகத் புஷ்பகுமார, பிரேம்நாத்.சி.தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார், ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் நீண்டகால நடைமுறையைப் பின்பற்றாது குறுகிய கால நடைமுறையின் கீழ் நிலக்கரியைக் கொள்வனவு செய்ததன் மூலம் சந்தையில் ஏற்படுகின்ற விலை ஏற்ற இறக்கத்தின் பலாபலனைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இருந்தபோதும் குறிப்பிட்ட கொள்முதல் நடைமுறையின் கீழ் சென்று அமைச்சரவை அனுமதியுடன் இந்த விலைமனு கோரலின் ஊடாக கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு சுட்டிக்காட்டியது.

நுரைச்சோலை லக்விஜய மின் 2011 பெப்ரவரி 13 தேசிய மின்வலுக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு 900 மெகாவட் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ததாகவும், இதில் 90 மெகவட்டுக்கான குறைபாடு காணப்படுதாகவும் கோப் குழு விசாரணைகளில் தெரியவந்தது. இதற்கமைய 810 மெகாவட் மின்சாரமே உண்மையில் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாகவும், குறைபாடாகவுள்ள 90 மொவொட் மின்சாரத் தேவை கவனத்தில் எடுக்கப்படாமல் இருக்க முடியாத விடயம் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கொள்முதல் குழுவின் செயலாளரை அமைச்சரவை 08 தடவைகள் அழைத்தபோதும் அவர் செல்லாது மேலதிக செலயலாளரை அனுப்பியிருந்ததாகவும், இதனால் எடுக்கப்பட்ட முடிவுகள் சட்டரீதியானவையா என்பது குறித்த பிரச்சினை இருப்பதாகவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழுவில் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. எனினும், மேலதிக செயலாளரை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக விசாரணைக்கு சமூகமளித்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக குழுவுக்கு அறிக்கையிடுமாறு தலைவர் வலியுறுத்தினார்.

1100 மில்லியன் ரூபா செலவில் இலங்கை மின்சாரசபை கொள்வனவு செய்த 3 மிதவைப் படகுகள் ஏன் கடற்படையினரின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வியெழுப்பிய கோப் குழு, இந்த மிதவைப் படகுகளைக் கடற்படையினருக்குப் பெற்றுக்கொடுத்த நடைமுறை, அவற்றை பராமரிக்காமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உடனடியான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டது.

அத்துடன், நிலக்கரி விநியோகம் தொடர்பில் ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும் என பத்திரிகை விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தபோதும், விண்ணப்பம் வழங்கப்படும்போதும் 3 வருட அனுபவத்துடன் கூடிய நிறுவனத்துக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டமை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதனால் லங்கா நிலக்கரி கம்பனிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே குழுவின் நிலைப்பாடாக இருந்ததது. கேள்விப்பத்திரம் கோருவதற்கான இறுதித் திகதி சரியான முறை பின்பற்றப்படவில்லையென்றும் குழு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு தீர்மானித்தது.

நிலக்கரி கொள்வனவுக்கு இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் தொடர்புபட்டதன் ஊடாக சாதாரண கேள்விப்பத்திர முறையின் கீழ் ஏனைய நிறுவனத்தின் ஊடாக நிலக்கரியைக் கொள்வனவு செய்ததால் நஷ்டம் ஏற்பட்டதா என்பது தொடர்பிலுமு் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது விசாரித்து விரைவில் அறிக்கையிடுமாறும் குழு உத்தரவிட்டது.

அத்துடன், இலங்கை மின்சாரசபை, இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம், லங்கா நிலக்கரி கம்பனி மற்றும் இவற்றுடன் தொடர்புபட்ட அமைச்சு ஆகிய நான்கு நிறுவனங்களும் அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாட வேண்டியதன் அவசியம் பற்றியும் குழு அவதானம் செலுத்தியதுடன், டீசல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கான செலவுகள் குறித்தும் கோப் குழு உறுப்பினர்களின் கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடப்பட்ட இந்த விடயங்கள் தொடர்பில் சகல அறிக்கைகளையும் ஒரு மாத காலத்துக்குள் கோப் குழுவுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவர் இறுதியில் வலியுறுத்தினார்.