இதோ கொரோனா தொடர்பிலான முழுமையான தகவல்

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 26 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 4 பேர் நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் மேலும் 190 ஊழியர்களுக்கு இன்று பிற்பகல் கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த கொத்தணியில் மொத்தமாக ஆயிரத்து 28 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொவிட் 19 நோயாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்ட பெரிய கொத்தணியாக மினுவாங்கொடை – ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை நிலவுகிறது.

இதற்கு முன்னர் கந்தகாடு முகாம் மற்றும் சேறுவில கடற்படை முகாம் என்பன அதிகபடியான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொத்தணிகளாக இருந்தன.

அதேவேளை வெலிசரயில் உள்ள ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளார்.

ப்ரெண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான வெலிசரை தொழிற்சாலையில் நேற்று 500 பேருக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதேநேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியாளராக உள்ள ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சிலாபத்தைச் சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் நோய்த்தொற்று ஏற்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் சேவையாளர்களுக்கு இடையே காது கேளாத தன்மை நிலவியதாக தகவல் கிடைத்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வைரஸ் தொற்றுக்கு உள்ளான மினுவாங்கொடை பகுதியை சேர்நத பெண்ணுக்கு இடைநடுவே கொவிட் 19 தொற்றுறுதியாகி இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பிரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணிக்கு அமைய அநுரதாபுரம், பதுளை, காலி, குருநாகல், கண்டி, பொலன்னறுவை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதான வைத்திய அதிகாரி சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்-19 பரவலை கட்டுப்பத்துவதற்காக காவல்துறைமா அதிபர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காவல்துறைமா அதிபர் செயற்பாட்டு மையம் என்பன காவல்துறை தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் குறித்து பொதுமக்கள் 1933 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு, காவல்துறைமா அதிபர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன், 0115 97 87 01, 0115 97 87 03, 0115 97 87 19, 0115 97 87 22, 0115 97 87 37, 0112 47 27 57 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

இதேநேரம், 0112 44 44 80, 0112 44 44 81, 0115 97 87 16, 0115 97 87 31 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு காவல்துறைமா அதிபர் செயற்பாட்டு மையத்திற்கு தகவல் வழங்க முடியும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் பலர் தொடர்ந்தும் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி வத்தளை, கந்தானை, ஜா-எல, பியகம, கிரிபத்கொட, சப்புகஸ்கந்த, பேலியகொட, களனி, கடவத்தை, மீகஹாவத்தை, ராகம மற்றும் மாபாகே போன்ற இடங்களில் வசிக்கின்றவர்கள், அந்தந்த பிரதேசங்களில் குறித்து ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லுமாறு காவற்துறையினரால் இன்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கொவிட் 19 நோய் தொற்று உறுதியாகி இருந்த 62 வயதான நபர் ஒருவர் றாகம வைத்தியாலையில் இருந்து இன்று காலை தப்பிச் சென்றிருந்தார்.

எனினும் அவர் மீண்டும் வைத்தியாலையின் வெளிநோயார் சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர் வைத்திசாலையில் இருந்து வெளியில் எங்கும் செல்லவில்லை என்றும் அவர் ஏற்கனவே தங்கி இருந்த நோயாளர் சிகிச்சை அறையில் இருந்து வெளியேறி பிரிதொரு அறையில் தங்கி இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நாட்டில், சமுத்தில் இருந்து கொவிட் 10 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணியில் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, தொடர்ச்சியாக பலர் அந்த கொத்தணியை மையப்படுத்தி அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்தநிலையில் அந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தை அண்டிய பகுதிகளில் இன்று பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.