இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்கு கீழ் வந்துவிட்டது என கருதுவது பிழையானது!

தடுப்பூசி குறித்து சீனத்தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதால் இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்கு கீழ் வந்துவிட்டது என்று கருதுவது பிழையானது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சினோஃபாம் தடுப்பூசி இலங்கைக்கு எந்த விலைக்கு வழங்கப்பட்டது? ஏனைய நாடுகளுக்கு எந்த விலைக்கு வழங்கப்பட்டது? என்பது தொடர்பாக சீன அரசாங்கமே அறிவிக்க முடியும்.

இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் சீன அரசாங்கத்தின் பிரதிநிதியாக உள்ள நிலையில், அந்த அறிவிப்பு சீன அரசாங்கத்தின் அறிவிப்பாகவே கருதப்பட வேண்டும்.

இதற்காக இலங்கை சீனாவிற்கு கீழ் வந்துவிட்டது என்று கூற முடியாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சினோபாம் தடுப்பூசியின் விலை தொடர்பில் வெளியிடப்படும் ஊடக செய்திகள் குறித்து அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தடுப்பூசி 18 டொலர் முதல் 40 டொலர் வரையில் வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பேரம்பேசுதல் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் இடம்பெற்றுள்ளது.

25 டொலருக்கு கூட இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட நாடுகள் இருக்கின்றன.

எனவே பேரம்பேசுவதில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் சுட்டிக்காட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.