கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான முழுமையான விபரங்கள்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 605 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் முதலாவதாக தொற்றுறுதியான பெண் மற்றும் அவரின் மகள் தவிர்ந்த 101 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது.

இன்று முற்பகல் 220 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியான நிலையில் மதிய வேளையில் 246 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், இன்று மாலை 139 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

இதன்படி மினுவாங்கொடை கொத்;தணியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுநாள் வரையில், நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 நோயாளர்கள் மினுவாங்கொடை கொத்தணியில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து அம்பாறைக்கு விடுமுறைக்காக சென்றிருந்த அதன் பணியாளர் ஒருவருக்கு கொவிட்19 தொற்றுறுதி செய்யப்பட்டது.

அம்பாறை – மஹஓயா மற்றும் பதியத்தலாவை பகுதியில் 3 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெண்ணொருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லாதாகரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம், தெய்யத்தக்கண்டியில் உள்ள பெண் ஒருவர் அந்த பகுதிக்கு வந்த போது சிறு கலந்துரையாடலை மேற்கொண்டு சென்றிருந்த நிலையில் அவருக்கு கம்பஹா பகுதியில் வைத்து கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவருடன் தொடர்புடைய 45 குடும்பங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லாதாகரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, கம்பஹாவில் இருந்து மட்டக்களப்பு பல்கலைகழகத்திற்கு சென்ற நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட 16 மருத்துவ பீட மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு கொவிட் 19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் 171 பேருக்கு கொவிட் 19 தொற்றுக்கான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் அவர்களில் எவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தயமூர்த்தி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, மினுவாங்கொடையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான பெண்ணின் மகள் கல்வி பயின்ற மேலதிக வகுப்பின் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்;ட 101 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் எவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 7 இன்று பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.

700 கொவிட் 19 தொற்றுதியான நிலையில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 3 ஆயிரத்து 979 பேருக்கு கொவிட் நாட்டின் தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் கம்பஹா காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெயாங்கொடை, மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய ஆகிய இடங்களில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், தற்போது மேலதிகமாக கம்பஹா காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்திலும் ஊரடங்கு அமுலாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை ப்ரென்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நாட்டின் எந்த பாகத்தில் இருந்தாலும் வெளியில் நடமாட வேண்டாம் என அரசாங்கம் கோரியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவௌ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அடையாளப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை பேணியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் ஊடாக நெடுந்தூர பேருந்து சேவைகள் இடம்பெறும் என்ற போதும், அந்த பிரதேசங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோன்று, தொடருந்து சேவைகளும் நாட்டின் சகல தொடரூந்து நிலையங்களிலும் காவல்துறையினரை பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைக் குறிப்பிட்டுள்ளார்.