நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை முறையானதல்ல-பேராயல் மெல்கம் காதினல் ரஞ்சத்

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் நீதிமன்ற நடவடிக்கையின்றி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் அதிர்ப்பத்தியடைவதாக பேராயல் மெல்கம் காதினல் ரஞ்சத்  தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயல் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுவிக்கப்பட்டமை தமக்கு ஆச்சர்யம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வு திணைக்களம், ரியாஜ் பதியூதீனை கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கைது செய்தது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர்; ஜாலிய சேனாரத்ன, கைதான ரியாஜ் பதியூதீன் ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி ஒருவருடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனினும் 5 சுமார் 5 மாத காலமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த தமது சகோதரர் விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

பின்னர் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்தப்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளரிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த காவல்துறை பேச்சாளர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், அவர் 5 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின்போது, அவருக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான போதுமான சாட்சியங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதனால், அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவை நிறைவடையவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.