போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் உட்பட ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேரை இன்று கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று விசேட புலனாய்வு பிரிவின் பொலிஸாருடன் இணைந்து சாய்ந்தமருது வேப்பையடி வீதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்தபோது அங்கு ஐஸ் போதைபொருள் வியாபாராத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 330 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதேவேளை இஸ்லாபாத்தைச் சேர்ந்த ஒருவரை 60 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும், கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஒருவரை 350 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவுடனும் மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 1490 மில்லிக்கிராம் ஹெரோயினுடம் கைது செய்துள்ளனர்.

20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

x