இறுதி யுத்தத்திற்கு முன்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராயவுள்ள அரசாங்கம்

இறுதி யுத்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் ஆராய உள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர், அங்கு இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியிலேயே காணாமல் ஆக்கப்பட்ட சம்பங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

2010 ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் அவ்வாறான எந்த சம்பவமும் பதிவாக வில்லை.

அவ்வாறு காணாமல்போதல்கள் அல்லது கொலைகள் இடம்பெற்றிருக்குமாயின், அது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பல்வேறு நபர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டன.

எனினும், அதனுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்படவில்லை.

அவ்வாறெனில், அந்த வழக்குகளின் சாட்சியங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏதேனும் குறைப்பாடுகள் இருக்ககூடும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இதன்போது, இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அனைவரினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும், பிரித்தானியா தூதரக அறிக்கையில் டேவிட் கேஸ், இலங்கையில் 7 ஆயிரம் பேர் வரையிலேயே காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கும் பரஸ்பர வேறுபாடுகள் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை கொண்டு, குறித்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.