இரசாயன உரங்களின் பயன்பாடற்ற முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன்

முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காமல் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இரசாயன உரங்களின் பயன்பாட்டிலிருந்து நீங்கிய எந்த நாடும் உலகில் இல்லாதிருப்பது இலக்கை அடைவதற்கு ஒரு தடையல்ல. பேசிப் பேசி இருக்காது விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் பயன்பாடு மற்றும் இறக்குமதி மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நேற்று 29ந் திகதி காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

“ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த குடிமகனை உருவாக்க நச்சு அல்லாத உணவுக்கான மக்களின் உரிமையை அரசாங்கம் உத்தரவாதம் செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் இலங்கையில் விவசாயத்திற்கு முழுமையாக சேதன உரங்களைப் பயன்படுத்த அந்த உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும். ” என “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை பிரகடனத்தில் உறதியளிக்கப்பட்டுள்ளது.

அதனை யதார்த்தமாக்குவதற்கு அடித்தளமிடும் வகையில் காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடன் பசுமை சமூக-பொருளாதார மாதிரியை உருவாக்கும் நோக்கில் 20 அம்ச அமைச்சரவை விஞ்ஞாபனம் அண்மையில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இரசாயன உர இறக்குமதிக்காக இலங்கை 2019 இல் 221 மில்லியன் டொலர்களை செலவிட்டது. எண்ணெய் விலை அதிகரிப்புடன், அந்த செலவு 300-400 மில்லியன் டொலர் வரை அதிகரிக்கும். இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிற்கு பெரும் செலவு செய்த போதிலும், விவசாய உற்பத்தியில் தரமான அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மண் வளம் குறைந்து விளைச்சல் குறைந்து, பல்லுயிர் அழிவுக்கு வழிவகுத்துள்ளது. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆறுகள் மற்றும் நீரோடைகளை மாசுபடுத்துவதுடன், தரமான குடிநீர் விநியோகத்திற்கு கடுமையான சவாலாக உள்ளது. சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான அரசாங்க செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுதல், சுகாதார நிலைமைகள் மோசமடைதல் மற்றும் மக்களின் உற்பத்தித்திறன் குறைதல் ஆகியவை நாடு எதிர்கொள்ளும் சவாலாக மாறியுள்ளது.

வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் ஒரு நிலையான பசுமை சமூக-பொருளாதார முறையை உருவாக்குவது தாமதமாகக்கூடாது. எழும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நாம் அடையாளம் காண வேண்டும். இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை விட்டுவிடுவது உற்பத்தியைக் குறைக்கும் என்று விவசாயிகள் நினைக்கலாம். அப்படியானால், இரசாயன உர மானியத்திற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் ரூ .50 பில்லியனில் இருந்து குறையும் வருமானம் ஈடு செய்யப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்தார்.

திட்டத்தை செயல்படுத்த முறையான பயிற்சி மற்றும் சரியான ஆய்வுடன் ஒரு பிரிவினர் தேவை. நாடு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய உணர்வும் முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தைப் பற்றி விரும்பாதவர்கள் அல்லது வேறு வகையாக சிந்திப்பவர்கள் ஆரம்பத்திலேயே நீங்கிக் கொள்வதற்கு தடையில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். சவாலை வெற்றிகொள்ள தான் தனிப்பட்ட முறையில் விவசாய சமூகத்திடம் செல்வதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

மாவட்ட மட்டத்தில் சேதன உர உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நேரடியாக தலையிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாயத்தில் ஈடுபடும் பலருக்கு இது ஒரு முக்கியமான விடயமாக இருப்பதால் எதிர்ப்புக்கள் வரலாம். சமயத் தலைவர்கள், விவசாய அமைப்புகள், தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரச அதிகாரிகள், ஊடக ஆதரவு மற்றும் அனைத்து தரப்பினரும் பங்கேற்பதன் மூலம் இலக்கை எளிதில் அடைய முடியும் என்று பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வசதியான வகையில் சேதன உர சந்தையை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சங்கைக்குரிய அதுரலிய ரத்ன தேரர், கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான டீ.பீ ஹேரத், அஜித் நிவார்ட் கப்ரால், எஸ். வியலேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுளா திஸாநாயக்க, அனூப பாஸ்குவல், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, ஆகியோருடன் அரச அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், சேதன உர உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

x