ஜூனில் இலங்கை வரும் தடுப்பூசிகள் – அமெரிக்கா நம்பிக்கை

கோவெக்ஸ் தடுப்பூசி நிவாரணத் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 1.4 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் ஜூன் மாதம் அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளுக்கு கொவிட் தடுப்பூசி நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இலங்கைக்கு கோவெக்ஸ் திட்டத்தின் முதற்கட்ட விநியோகம் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்றது.

அப்போது 260,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றன.

இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு இந்த திட்டத்தின் ஊடாக 1,440,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கோவெக்ஸ் திட்டத்துக்காக அமெரிக்கா 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

x