தமிழ் பேசும் மக்களுக்காக, காவல்துறை தலைமையகத்தினால் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு

தமிழ்பேசும் மக்கள் உள்ள பகுதிகளில், புதியவர்களை ஆட்சேர்ப்பதற்கான அவசியப்பாடு காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள், தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழும் பகுதியாகும்.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகளையும், காவல்துறையினர் செயற்படும்போது ஏற்படும் பிரச்சினைகளையும் கண்டறிந்து, அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தங்களின் நோக்கம் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கலந்துரையாடல்கள் மூலம், அரச அதிகாரிகள், அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் ஆகியோரின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக, தமிழ் பேசும் மக்களுக்காக, காவல்துறை தலைமையகத்தினால், விசேட வேலைத்திட்டத்தை முறையான நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

அவர்களின் முறைப்பாடுகளை, அவர்களின் மொழியில் பதிவுசெய்தல், நீதிமன்ற அறிக்கைகளையும் அவ்வாறே தாக்கல் செய்தல், போக்குவரத்து குற்றத்துடன் தொடர்புடையதாயின், அது தொடர்பான ஆவணங்களை தமிழ் மொழியில் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, தமிழ்பேசும் மக்களுள்ள பகுதிகளில், பயிலுநர்களை ஆட்சேர்ப்பதற்கான அவசியப்பாடு காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்கான செய்தியை வழங்கவே தாம் வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, இரண்டு மொழிகளிலும் சேவையாற்றி, உச்சப்பட்ச பொதுமக்கள் சேவையை ஏற்படுத்துவதே தங்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

x