இன்று சர்வதேச சிறுவர்,முதியவர் தினம்

‘எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில், சர்வதேச சிறுவர் தினத்தை இலங்கை இன்று கொண்டாடுகின்றது.

இதன் தேசிய நிகழ்வு, நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

சர்வதேச முதியோர் தினமும் இன்று இலங்கையில் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

சிறுவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் உள, உடல், ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை, குழந்தைகளே ஒவ்வொரு நாட்டினதும் எதிர்காலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை ஆரோக்கியமான செயற்திறன் மிக்க குழந்தைகளாக மாற்றுவதற்கு, குழந்தைகள் முறையாக வழிநடத்தப்படுகின்றார்கள் என்பதை உறுதிசெய்வது எமது பொறுப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பான மற்றும் வளமான தேசத்தை உருவாக்குவதற்கு இலங்கையின் அனைத்து சமூகங்களும் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர கலாசாரம், சமூக மற்றும் தார்மீக விழுமியங்கள் என்பனவும் கைக்கொடுக்கும் என தான் நம்புவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் சிறுவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக 1928 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என இலங்கை கணனி அவசர பதிலளி;ப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இந்த விடயத்தில் பெற்றோர்களும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.