இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே தடையின்றி நீரை விநியோகிக்க முடியும்

தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக, மேலும் இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே, நாட்டின் சில பகுதிகளுக்கு தடையின்றி நீரை விநியோகிக்க முடியும் என நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

அந்த சபையின் பொது முகாமையாளர் திலின விஜேதுங்க எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

நீர் விநியோகம் குறைவடைந்துள்ள சில உயர்நிலப் பகுதிகளில், தற்போது நீர்த்தாங்கிகள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இடம்பெறுகின்றது.

எனவே கொழும்பு, களனி, மஹர, ஆகிய பகுதிகளுக்கான நீரை விநியோகிப்பதில் எந்தவித சிக்கல்களும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும், எதிர்வரும் இரண்டு வாரங்களின் பின்னர் லபுகம, களட்டுவாவ பகுதியிலிருந்து நீரை விநியோகிப்பதற்கு பிரச்சினை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

அந்த பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் குறைவடைந்துள்ளமையை இதற்கான காரணம் என திலின விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.

x