பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 20ஆவது திருத்தம் தொடர்பில் கருத்து!

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (29) தெரிவித்தார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து என்ன?

பிரதமர்: அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது அல்லவா?

பிரதமர்: அனைத்து கட்சிகளுக்கும் அது தொடர்பில் குழுக்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில் நாம் அனைவருடனும் அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடினோம். எதிர்க்கட்சியும் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிகிறேன்.

ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா?

பிரதமர்: இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது

ஊடகவியலாளர்: இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின்போது 13ஆவது திருத்தத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து.

பிரதமர்: தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம்.

ஊடகவியலாளர்: புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வரவுள்ளீர்களா?

அமைச்சர் உதய கம்மன்பில: புதிய அரசியலமைப்பு வரைவொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டும்.

பிரதமர்: அரசியலமைப்பு முழுவதும் மாற்றம் செய்யப்படின் வாக்கெடுப்பிற்கு செல்வது அவசியமாகும். ஆனால், எமக்கு அந்த மக்கள் ஆணை தெளிவாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: 19ஆவது அரசிலமைப்பை நீக்க வேண்டும் என்றே எமக்கு மக்கள் ஆணை கிடைத்தது. அது குறுகிய கால தீர்வு. புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவது நீண்ட கால தீர்வாக அமையும் என்றார்.

குறித்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தொழிற்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த, பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.