கண்டி, பூவெலிக்கட பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுர லெவ்கே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று (29) ஆஜர் படுத்திய போது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கண்டி, பூவெலிக்கட பகுதியின் சங்கமித்த வீதியில் இருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று கடந்த 20 ஆம் திகதி அதிகாலை வீடொன்றின் மீது இடிந்து விழுந்திருந்தது.

சம்பவத்தில் ஒன்றரை மாத குழந்தை மற்றும் குழந்தையின் தாய், தந்தை ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கட்டிடத்தின் உரிமையாளர் அனுர லெக்கே இன்று (29) காலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.