வி.ஜ.மு. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடவில்லை

வி.ஜ.மு. லொகுபண்டார விரும்பிய சுதேசாபிமான சிந்தனையுடனான ஒரு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதே நாம் அவரது சார்பாக இப்போது செய்யக்கூடிய மிகப் பெரிய கடமையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 25 ந் திகதி தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் வி.ஜ.மு. லொகுபண்டார அவர்களின் மறைவு குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய இரங்கல் உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வி.ஜ.மு. லொகுபண்டார அவர்கள் அரசியல்வாதியாகவும் தேசம் மீதான ஆர்வத்தை கைவிடாத ஒரு சிறந்த மனிதர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி பிறந்த வி.ஜ.மு. லொகுபண்டார அவர்கள் யஹல பெத்த வித்தியாலயம் மற்றும் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்றார். அவர் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவராவார்.

சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற வி.ஜ.மு. லொகுபண்டார அவர்கள் ஒரு வழக்கறிஞராகவே அரசியலில் நுழைந்தார்.அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பே, சிங்கள மொழி, கலாசாரம் மற்றும் மதம் ஆகியவற்றின் மீது ஆழமான பிணைப்பை கொண்டிருந்தார்.அவர் இளம் வயதிலிருந்தே பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதினார் என்பது எங்களுக்குத் தெரியும். விவாதங்களில் ஈடுபட்டார். இவ்வாதங்கள் அப்போது நாட்டின் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.

அதுமாத்திரமன்றி வி.ஜ.மு. லொகுபண்டார அவர்களினால் தேசத்திற்கு பங்களித்த பல சிறந்த படைப்புகளும் உள்ளன. சீகிரியா கீ சிறி போன்ற விமர்சன படைப்புகள் மொழி மற்றும் கலாசார ஆர்வலர்களிடையே அதிகம் பேசப்பட்டன.

1977ஆம் ஆண்டு ஹப்புதளை ஆசனத்தை வெற்றி கொண்டு ஐ.தே.க ஊடாக அரசியலுக்குள் நுழைந்த வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள், அரசியல்வாதியாகவும் தனது தேசம் மீதான ஆர்வத்தை கைவிடாத சிறந்த மனிதராவார்.அமைச்சு பதவி கிடைக்கும்போது சிலர் மாறிவிடுவார்கள். எனினும், வி.ஜ.மு. அவ்வாறு மாறவில்லை.

விவாதங்களின் போது கூட அவர் மொழி மற்றும் இலக்கியம் குறித்த தனது அறிவை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தார். எதிர்ப்பாளர்களின் மனம் நோகாதபடி கருத்துக்களை எதிர்ப்பாளர்கள் மத்தியில் பரப்பும் ஒரு தனித்துவமான திறனைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் ஒரு திறமையான பேச்சாளராக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டார்.

அரசாங்கத்தின் சுதேசிய மருத்துவம், கல்வி, கலாசாரம் மற்றும் செய்தி போன்ற துறைகள் வி.ஜ.மு.லொகுபண்டார அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஒவ்வொரு அமைச்சகத்திலிருந்தும் மறக்கமுடியாத ஒன்றை அவரால் நாட்டிற்காக அர்ப்பணிக்க முடிந்தது.

சிங்கள-தமிழ் புத்தாண்டின் போதான எண்ணெய் வைத்து குளியல் செய்யும் சடங்கிற்கு அரச அனுசரணை வழங்கி, அச்சடங்கை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவர் பெரும் பங்களிப்பு செலுத்தியிருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.

பாராளுமன்றத்தில் கஞ்சி கோப்பையில் ஆரம்பித்து மூலிகை நீரை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆரம்பத்தை முன்னெடுத்தவர் வி.ஜ.மு.லொகுபண்டார ஆவார். அதுமாத்திரமன்றி தொலைபேசி அழைப்பிற்கு வணக்கம் எனக் கூறி உரையாடலை ஆரம்பித்ததும் அவரது தலையீட்டினாலேயாகும்.

நாம் சில வேளைகளில் வி.ஜ.மு.லொகுபண்டார அவர்களிடம் சில சொற்களுக்கு அர்த்தம் வினவியுள்ளமையும் எனக்கு நினைவிருக்கிறது. அதன்போது சொல்லின் அர்த்தம் மாத்திரமன்றி அதன் பாலி, சமஸ்கிருத மற்றும் ஆங்கில சொற்களை கூட கற்பிக்கும் பெரும் ஆற்றலை அவர் கொண்டிருந்தார். புதிய தலைமுறையினருக்கு உள்ளூர் கலாசாரத்தை கற்பிக்கப்பட வேண்டும் என அவர் எண்ணினார்.

அதனாலேயே தனக்கு அமைச்சின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டபோது திரிபிடகவை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து மறுபதிப்பு செய்யவும், வீர கதாபாத்திரங்கள் குறித்த ´பூஜித ஜீவித´ நூலை அறிமுகப்படுத்தவும், சுபாஷிதய, லோகோபகாராய, அமாவதுர, வதன் கவி பொத போன்ற நூல்களை மறுபதிப்பு செய்யவும் வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் முன்முயற்சி மேற்கொண்டார்.

உயரிய சபையான பாராளுமன்றத்தின் 16ஆவது சபாநாயகராக பதவி வகிக்கும் அளவிற்கு வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் அதிஷ்டசாலியாக விளங்கினார். அன்று எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் சபாநாயர் பதவிக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அப்பதவிக்கு கௌரவமளிக்கும் வகையில் செயற்பட்டார்.

தேசிய உடையின் முக்கியத்துவம் குறித்து அவர் என்னுடன் அடிக்கடி கலந்துரையாடியுள்ளார். அரசியல்வாதிகள் தேசிய உடை அணிய வேண்டும் எனவும், அதன்மூலம் உலக மத்தியில் சுதேசவாதத்தை பிரதிபலிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் தனது மனதில் கொண்டிருந்த சுதேசவாத சிந்தனை எமது அரசியல் கொள்கையில் இணைந்திருப்பது குறித்து வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியடைந்தார்.

அதற்கு தன்னால் முடிந்த ஆதரவை வழங்கினார். அரச அதிகாரம் இல்லாத காலத்தில் அவரது புதல்வர் உதித லொகுபண்டார அவர்களை எமது அரசியல் நடவடிக்கைகளுக்காக ஆதரவு வழங்குவதற்காக ஈடுபடுத்தினார். அதுமாத்திரமன்றி தேவையான அனைத்து சந்தர்ப்பங்களிலும் எமது குடும்பத்துடன் நெருக்கமாக செயற்பட்டார்.

இந்நாடாளுமன்றத்தின் கடந்த காலத்தைப் பற்றி நாம் சிந்தித்தால், வி.ஜ.மு.லொகுபண்டார அவர்களை புகழ்வதற்கு இன்று ஒரு நாள் போதாது. எனவே நான் அதிகம் பேசப்போவதில்லை.

வி.ஜ.மு. லொகுபண்டார அவர்கள் விரும்பிய சுதேசாபிமான சிந்தனையுடனான ஒரு சுபீட்சமான நாட்டை உருவாக்குவதே நாம் அவரது சார்பாக செய்யக்கூடிய ஒரே கடமையாகும்.

ஒரு எழுத்தாளர், விரிவுரையாளர் போன்று வி.ஜ.மு.லொகுபண்டார அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், ஆளுநர் மற்றும் சபாநாயகராக இந்நாட்டிற்காக ஆற்றிய சேவைகள் அளப்பரியவையாகும்.

அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது மறைவின் துயரால் வாடும் அனைத்து குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

x