மனித உரிமைகள் பேரவையி இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் இலங்கை தொடர்பாக நிலவுகின்ற விடயங்களில் இறுதியானதும், வினைத்திறனானதுமான தீர்வொன்றைக் தேடுவதற்கான அர்ப்பணிப்பின் ஊடாக நாம் வழிநடத்தப்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் நேற்றையதினம் இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்திருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பாக இன்றை அமர்வில் உரையாற்றிய இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணிபாண்டே இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை விடயத்தில் இந்தியா இரண்டு பிரதான தூண்கள் என்ற அடிப்படையில் செயற்படுகிறது. இலங்கையின் இறைமையை மதித்தலும், ஐக்கியத்துக்கு உதவுதலும் என்ற ஒரு தூணையும், தமிழ் மக்களது அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட்டு சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவத்துடன் அவர்கள் வாழ வேண்டும் என்ற இன்னொரு விடயத்தை இந்தியா கடைபிடிக்கிறது.

இந்த இரண்டு விடயங்களும் ஒன்றில் ஒன்றை விட்டுக்கொடுக்க முடியாததும், தெரிவுகளுக்கு அப்பாற்பட்டதுமாகும். இலங்கையின் நெருங்கிய அண்டை நாடு என்ற அடிப்படையில் மனித உரிமைகள் பேரவையில் இதுவரையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட 7 பிரேரணைகள் குறித்த கலந்துரையாடல்களில் இந்தியா பங்கேற்றிருக்கிறது.

தமிழ் மக்களுக்கு சட்டரீதியான அதிகாரப்பகிர்வின் ஊடாக அவர்களது உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஐக்கியத்துக்கு நேரடியாக பங்களிப்பு செய்யும். இலங்கையின் நலன்கருதி தமிழ் மக்களது நியாயமான அபிலாசைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்தநிலையில் இந்த விடயத்தில் அரசாங்கமும் 13ஆம் திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் மற்றும் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்தல் ஆகிய விடயங்களில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

யுத்தம் நிறைவடைந்த 12 ஆண்டுகள் கடந்துவிட்டநிலையில், இலங்கையின் நிலைமைகள் குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆய்வுகள்  கரிசனையை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதற்கு இலங்கை அரசாங்கமும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த இரண்டு விடயங்களை அவதானத்துக்கு உட்படுத்தியதன் அடிப்படையில், இவ்வாறான விடயங்களுக்கு வினைத்திறனான தீர்வினை நோக்கி வழிநடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவின் பிரதிநிதி மணிபாண்டே தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணையாளரது இலங்கை தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு, இலங்கை அரசாங்கம் மூலோபாய திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று, ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

மனிதஉரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதிநிதி டேனியல் க்ரொனென்ஃபெல்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க கரிசனைக் கொண்டுள்ளது. சுயாதீன ஊடகம், சிவில் சமுக அமைப்புகளுடன் சிறுபான்மை சமூகமும் ஒதுக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளது.

பொறுப்புக்கூறல் விடயங்களில் முறையான செயற்பாடுகள் இல்லை. இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுக்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையை முழுமையாக அமுலாக்குவதற்கான நேரஅட்டவணையை உள்ளடக்கிய திட்ட அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நட்டயீட்டு அலுவலகம் என்பனவும் அரசியல் தலையீடுகள் இன்றி இயங்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் பிரதிநிதி டேனியல் வலியுறுத்தியுள்ளார்.

x