பொறியில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியதால் பொது மக்கள் பதற்றம்!

பொகவந்தலாவ காவல் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ சீனாகொலை (செப்பல்ட்டன்) தோட்ட எல்லை பகுதியில் பொறியில் சிக்குண்ட சிறுத்தை ஒன்று இன்று (15) அதன் கம்பிகளையும் உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளமையினால் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்டத்தில் சீனாகொலை எல்லையில் இன்று காலை தேயிலை கொழுந்து பறிப்பதற்காக சென்ற தொழிலாளர்கள், ஐந்து அடி நீளமான சிறுத்தை ஒன்று பொறியில் சிக்குண்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்களினுாடாக நல்லதண்ணி வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவித்துள்ளனர்.

எனினும் வனஜீவராசிகள் அதிகாரிகள் வருவதற்கு முன் குறித்த சிறுத்தை கம்பியினை உடைத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளது .

இதனால் இந்த சிறுத்தை மீண்டும் வந்து தம்மைத் தாக்கலாம் என பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக அப்பகுதியில் உள்ள நாய்களை சிறுத்தை கொண்டு சென்று தின்று விடுவதாகவும், தேயிலை மலைகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுவதாகவும் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் அறிவித்த போதிலும் இது வரை உரிய நடவடிக்கை எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே பெரும் ஆபத்துக்கு மத்தியில் தொழில் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து உரிய தரப்பினர் நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

x