Traffic Bot

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என அந்த கட்சியின் அரசியல் உயர் பீடம் நிபந்தனை விதித்துள்ளது.

கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் தலைமையில் நேற்றைய தினம் கூடிய அரசியல் உயர் பீடத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

20 ஆவது அரசயலமைப்பு திருத்தத்திற்கு அதரவாக வாக்களித்திருந்த அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நசீர் அஹமட், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹாரிஸ் மற்றும் எம்.எஸ்.தவுபிக் ஆகியோரும் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், கொவிட் 19 தொற்றுறுதியாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அரசாங்கம் கூறியதாலேயே 20 ஆவது அரசயலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம், கட்சியின் அரசியல் உயர் பீடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோரவில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர் பீடமும் நேற்றைய தினம் கூடியிருந்தது.

நீண்ட நேரமாக இடம்பெற்ற இந்த கூட்டத்தின் ஊடாக பாதீடுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர்களுக்கு அது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு இந்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமிர் அலி தெரிவித்தார்.

x