அரசாங்கத்தின் ஊடாக முடிந்தளவு அனுகூலங்களை பெறுவது பொதுமக்களின் பொறுப்பு

அரசாங்கமொன்றை அமைத்து அந்த அரசாங்கத்தின் ஊடாக முடிந்தளவு அனுகூலங்களை பெற்றுக்கொள்வது பொதுமக்களின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று 13 ந் திகதி தெரிவித்தார்.

ரூபாய் 14 கோடி செலவில் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளை கொண்ட பேருவளை பிரதேச சபையின் பல்நோக்கு கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

நாம் கிராமமொன்றுக்காக சேவை செய்கின்றோமாயின் அந்த சேவையை பெற்றுக் கொள்ளும் இடம் சிறப்பாக இருக்க வேண்டும் என நாம் நம்புகின்றோம்.

சேவையாற்றுவதற்கு சேவை செய்யும் இடம் தாக்கம் செலுத்தும். இன்று தலைவருக்கு புதிய கட்டிடம் கிடைத்துள்ளது. இங்கு வருகை தரும் பொதுமக்களுக்கேனும் அமர்வதற்கு இடமுள்ளது. அதனால் சிறந்த சூழலில் அமர்ந்து இங்குள்ள ஊழியர்களுக்கு தமது சேவையை செய்ய முடியும். சேவையை பெற்றுக் கொள்வோருக்கும் அவ்வசதி கிடைக்கும்.

இதுபோன்றதொரு தலைவர் குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில், தங்களுக்கு அரசாங்கத்தினாலும் பிற துறைகளிலும் பெறக்கூடிய அனைத்து உதவிகளையும் பெற்று தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து இவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று ஓராண்டு என்ற குறுகிய காலமேயாகிறது. அந்த காலப்பகுதியிலும் நான்கு மாதங்கள் போன்ற காலமே அரசாங்கத்தை செயற்படுத்த முடிந்தது. ஏனைய காலப்பகுதி குறித்து புதிதாக எதுவும் கூறவேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.

எவ்வாறாயினும் இன்று விசேடமாக நகரத்தை விட கிராமம் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்கு நாம் அனைவரும் முயற்சிக்கிறோம். கிராமத்திற்கு நகரத்திலுள்ள வசதிகளை பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பும் கடமையுமாகும். அதனை நாம் நிறைவேற்றுவோம்.

ஒருவருக்கு நீர், மின்சாரம், வீதி போன்ற தேவைகளை பெற்றுக் கொடுக்க முடியுமாயின் அனைத்து நடவடிக்கைகளின் மூலமும் கிராமமொன்றை அபிவிருத்தி செய்ய முடியும். அதன்மூலம் மாகாணமொன்றை அபிவிருத்தி செய்ய முடியும். அதற்கு முக்கித்துவமளித்து நாம் செயற்படுவோம்.

விசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 15 மணிநேரம் சேவையாற்றும் தலைவராவார். உண்மையை கூற வேண்டுமாயின் நான் வேலை செய்வதில்லை. எனினும், அவர் இந்த அனைத்து நிறுவனங்கள் தொடர்பில், உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் ஒரு புரிதலுடனேயே தனது வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறார். அதனால் நாம் அதன்மூலம் நன்மையடைய வேண்டும்.

அரசாங்கமொன்றை அமைத்து அந்த அரசாங்கத்தின் ஊடாக அனுகூலங்களை பெறுவது பொதுமக்களின் பொறுப்பாகும் என நான் கருதுகிறேன். அவ்வாறு இன்றி அமைச்சர்களை நியமித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்து, சபையொன்றை கட்டியெழுப்பி, உறுப்பினர்களை நியமித்துவிட்டோம் இனி வேலை நடக்கும் என நாம் ஒதுங்கிவிட்டால் அதனால் பாதிப்பே எஞ்சும்.

அதனால் தாம் நியமிக்கும் உறுப்பினர், தலைவரை, தமது அரசியல் தலைவராக நியமித்துக் கொண்டதன் பின்னர் அவர்களை கொண்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வது உங்களது கடமையாகும். அதனை செய்யும் உரிமை உங்களுக்குள்ளது. அந்த உரிமையை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தமது பிரதேசம் அபிவிருத்தியடைந்தால் தான் சுற்றியுள்ள ஏனைய பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியும். அதனால் இவ்விடத்திற்கு வருகைதந்து இந்நடவடிக்கையியல் தொடர்புபட முடிந்தமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிசாந்த, ஜயந்த சமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான அனூப பாஸ்குவெல், சஞ்ஜீவ எதிரிமான்ன, மர்ஜான் ஃபலீல், மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, பேருவளை பிரதேச சபையின் தலைவர் மேனக விமலரத்ன உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

x