இந்த அரசாங்கம் வேண்டுமென்றே இந்தியாவைச் சீண்டுகின்றது

வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும். இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இந்தியா தொடர்பில் இலங்கையின் சமகால நிலைப்பாடுகள் சம்மந்தமாகக் இன்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டிலே தற்போது என்ன நடக்கின்றது. நான்கு தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையம் தொடர்பாக போராட்டம் நடத்துகின்றன என்பதற்காக இலங்கை, இந்தியா, ஜப்பான் போன்ற மூன்று நாடுகள் சேர்ந்து மேற்கொண்ட ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுகின்றது. இந்தியா இந்த நாட்டிற்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கின்றது. ஜே.வி.பி காலகட்டத்திலே 1971ம் அண்டு நடந்த கிளர்ச்சியின் போது இந்தியா தான் இந்த நாட்டைக் காப்பாற்றியது. 2009ல் கூட இங்கு ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் இந்தியா இந்த அரசிற்கு உதவியது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை புகையிரதத் தண்டவாளங்களை அமைத்துத் தந்தது.

அதே போல் ஜப்பான் என்பதும் இன்னுமொரு ஜனநாயக நாடு. இந்தப் பாராளுமன்றக் கட்டிடம் கூட ஜப்பானால் இந்த நாட்டிற்கு அன்பளிப்புச் செய்யப்பட்து. அவ்வாறான நாடுகளை ஏன் வெறுக்கின்றீர்கள். எதிர்வரும் 22ம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இந் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்வதாகவும், 23ம் திகதி அவர் இந்தாப் பாராளுமன்றத்திலே உரையாற்ற இருப்பதாகவும் செய்திகள் மூலம் நாங்கள் அறிகின்றோம். இதன்மூலம் என்ன நடக்கப் போகின்றது.

பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்து உரையாற்றும் போது இந்தியாவிற்கு எதிராகத் தான் உரையாற்றப் போகின்றார். வேண்டுமென்றே இந்த அரசாங்கம் இந்தியாவைச் சீண்டுகின்றது. தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்கு உதவாது என்று சொல்லுவார்கள். இன்னொரு நாட்டுக்கு நட்பாய் இருக்க வேண்டும் என்பதற்காக தெற்காசியாவின் வல்லரசு நாட்டினை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதே என்னுடைய கேள்வி. இந்த நாட்டின் நண்பன் யார், எதிரி யார் என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

x