ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 2-வது சுற்றில் சக நாட்டை சேர்ந்த கவ்ரிலோவாவை எதிர்கொண்டார். இதில் ஆஸ்லே பார்டி 6-1, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் உள்ள கரோலினா பிரிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-2 என்ற கணக்கில் அமெரிக்காவை டேனிலி கோலின்சை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 11-ம் நிலை வீராங்கனையான பெலிண்டா பென்சிக் 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவை சேர்ந்த குஸ்னெட் சோவாவை தோற்கடித்தார்.

18-வது வரிசையில் உள்ள மெர்ட்டன்ஸ் (பெல்ஜியம்) 7-6 (10-8), 6-1 என்ற கணக்கில் சீனாவை சேர்ந்த லின்ஜூவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான சோபியா கெனின் (அமெரிக்கா) 2-வது சுற்றில் அதிர்ஷ்டம் இல்லாமல் தோற்றார்.

அவர் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த கனேபியிடம், 3-6, 2-6 என்ற கணக்கில் தோற்று வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆந்த்ரே ரூப்லே (ரஷியா) 6-4, 6-4, 7-6, (10-8) என்ற கணக்கில் பிரேசிலை சேர்ந்த டியாகோவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

x