கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு? விஜய் ஹசாரே போட்டியில் இருந்து விடுவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போட்டி வருகிற 13-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான அகமதாபாத்தில் நடக்கிறது.

3-வது டெஸ்ட் பகல்- இரவாக வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், 4-வது டெஸ்ட் மார்ச் 4-ந் தேதி முதல் 8-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வேகப்பந்து வீரர் டி.நடராஜன் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது.

முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. உள்ளூரில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டிக்கான தமிழக அணியில் அவர் இடம்பெற்று உள்ளார்.

இந்த நிலையில் அவரை தமிழக அணியில் இருந்து விடுவிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டது. இதனால் அவரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் காயம் அடைந்த வேகப்பந்து வீரர்கள் முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் ஹனுமன் விகாரி ஆகியோர் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. எனவே நடராஜன் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

29 வயதான நடராஜன் ஆஸ்திரேலிய பயணத்தின் போது சர்வதேச போட்டியில் அறிமுகமானார். கடைசி 20 ஓவர் போட்டியில் 2 விக்கெட் கைப்பற்றினார். 3 ஒருநாள் தொடரில் 6 விக்கெட் எடுத்தார்.

20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் அறிமுகமானது போல் டெஸ்டிலும் அவர் முதல் முறையாக விளையாடினார். பிரிஸ்பேனில் நடந்த 4-வது டெஸ்டில் நடராஜன் 3 விக்கெட் கைப்பற்றினார்.

முன்னணி வேகப்பந்து வீரர்கள் காயமடைந்ததால் அவருக்கு டெஸ்டிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

தற்போது அவர் விஜய் ஹசாரே போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுகிறார்.

x