தந்தையின் ஆசீர்வாதத்தால் ஐந்து விக்கெட் வீழ்த்தினேன்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் சேர்த்தன.

2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 294 ரன்னில் ஆல்அவுட் ஆக முகமது சிராஜின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. 19.5 ஓவர்கள் வீசிய அவர் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். இதில் லாபஸ்சேன், ஸ்மித் விக்கெட்டுகளும் அடங்கும்.

இந்தத் தொடரில் முகமது சிராஜ் வழக்கமான மற்ற வீரர்களை போன்று சாதாரண சூழ்நிலையில் விளையாடவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன் அவரது தந்தை காலமானார். அவரது இறுதி சடங்கிற்குக்கூட வரவில்லை. தந்தையின் இழப்பு அவரை மிகப்பெரிய அளவில் பாதித்தது.

தொடரை வென்று தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன் எனக் கூறினார். மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் ஆனார். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு இவரது பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில்தான் தற்போது பிரிஸ்பேன் டெஸ்டில் ஐந்து விக்கெட் சாய்த்துள்ளார். இந்தத் தொடரில் ஐந்து விக்கெட் வீழ்த்தி ஒரே பந்து வீச்சாளர்கள் இவர்தான்.

இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிந்த பின்னர் முகமது சிராஜ் கூறுகையில் ‘‘தற்போது எனது தந்தை உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் சந்தோசம் அடைந்திருப்பார். ஆனால், அவரது ஆசிர்வாதத்தால் தற்போது ஐந்து விக்கெட் வீழ்த்தியுள்ளேன்.

இந்திய அணியில் இடம் பிடித்து ஐந்து விக்கெட் வீழ்த்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது தந்தை இருந்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

எனது தந்தை காலமானதும் கடினமானதாக இருந்தது. என்னுடைய குடும்பம் மற்றும் அம்மாவிடம் பேசினேன். அதன்மூலம் தைரியத்தை பெற்றுக் கொண்டேன். இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்ற எனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தினேன்’’ என்றார்.

3 டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் முகமது சிராஜ்.

x