ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார்.

கேஎல் ராகுல் 51 ரன்களும், கடைசியில் களம் இறங்கிய ஜடேஜா 23 பந்தில் 44 ரன்களும் விளாச இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது.

பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது, ஆர்கி ஷார்ட், ஆரோன் பிங்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். குறிப்பாக ஜடேஜாவுக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கிய சாஹல் அசத்தினார்.

ஆஸ்திரேலியா 7.4 ஓவரில் 56 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆரோன் பிஞ்ச் 26 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை சாஹல் வீழ்த்தினார். அடுத்து வந்த ஸ்மித்தையும் (12) சாஹல் வெளியேற்றினார்.

4-வது வீரராக களம் இறங்கிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல்-ஐ 2 ரன்கள் எடுத்த நிலையில், நடராஜான் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேற்றினார். அப்போது ஆஸ்திரேலியா 10.3 ஓவரில் 75 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் ஆஸ்திரேலியா தடம் புரண்டது.

ஹென்ரிக்ஸ் 30 ரன்களும், ஆர்கி ஷார்ட் 34 ரன்களும், மிட்செல் ஸ்வெப்சன் 12 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், டி நடராஜன் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றது.