மெஸ்சியுடன் மீண்டும் இணைந்து விளையாட விரும்பும் நெய்மார்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்தில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்த ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் 2 கோல் அடித்த நெய்மாரிடம், அர்ஜென்டினா முன்னணி வீரர் லயோனல் மெஸ்சி பி.எஸ்.ஜி. கிளப்பில் இணையலாம் என்ற தகவல் தொடர்பாக கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த 28 வயதான நெய்மார், ‘மெஸ்சியுடன் இணைந்து நான் மிகவும் உற்சாகமாக விளையாடி இருக்கிறேன்.

அது போன்று மீண்டும் அவருடன் இணைந்து ஆட ஆசைப்படுகிறேன். அவர் இங்கு (பி.எஸ்.ஜி. அணி) வந்து எனது இடத்தில் விளையாட முடியும். அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவருடன் கைகோர்த்து அடுத்த ஆண்டு விளையாட விரும்புகிறேன். நாங்கள் இதை செய்தாக வேண்டும்’ என்றார்.

33 வயதான மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். நெய்மாரும் பார்சிலோனாவுக்காக 4 ஆண்டுகள் விளையாடி விட்டு பிறகு பி.எஸ்.ஜி. கிளப்புக்கு தாவிவிட்டார்.

அதே சமயம் பார்சிலோனா அணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளையும், விமர்சனங்களையும் சந்தித்த மெஸ்சி, சில மாதங்களுக்கு முன்பு அந்த அணியை விட்டு உடனடியாக விலக விரும்பினார்.

ஆனால் இந்த சீசனில் அவரது ஒப்பந்தம் இருப்பதால் பெரிய தொகை கொடுத்து தான் வெளியேற வேண்டிய சூழல் நிலவியது.

இதையடுத்து வேறுவழியின்றி இந்த சீசனில் பார்சிலோனா கிளப்பில் நீடிக்கும் மெஸ்சி, அடுத்த ஆண்டு நெய்மார் ஆடும் பி.எஸ்.ஜி. கிளப்புக்கு மாறிவிடலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.