இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முதல் முறையாக இன்று விளையாடும் தமிழன் நடராஜன்!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் தமிழன் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன்.

16 ஆட்டங்கள் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். துல்லிய யார்க்கர் பந்துகளை வீசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்களையே திணறடித்தார்.

ஏற்கெனவே அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அவர், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியிலும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் இந்தியா -அவுஸ்திரேலிய தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியின் 11 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

அவரை அணித்தலைவர் கோஹ்லி தட்டி கொடுக்க சக வீரர்கள் உற்சாகப்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

இப்போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ள இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது. தற்போது 44 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 216 ஓட்டங்களை பெற்றுள்ளது.