கால்பந்து ஜாம்பவான் மரடோனா கொல்லப்பட்டாரா? இறந்து 4 நாட்களுக்கு பின்னர் அதிர்ச்சி திருப்பம்

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் தனிப்பட்ட மருத்துவரின் குடியிருப்பில் பொலிசார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளதுடன், மரடோனாவின் இறப்பை கொலை என்ற கோணத்தில் விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிகோ மரடோனா மாரடைப்பால் மரணமடைந்து நான்கு நாட்களுக்கு பின்னர், அவரது தனிப்பட்ட மருத்துவர் Leopoldo Luque என்பவரின் குடியிருப்பிலேயே பொலிசார் இன்று பகல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவரின் குடியிருப்பில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு இருப்பதாகவும், கால்பந்து ஜாம்பவான் மரடோனா மருத்துவ அலட்சியத்தால் பலியானாரா என்பது தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மரடோனாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் முந்தைய நாள், அவர் தமது தனிப்பட்ட மருத்துவர் லியோபோல்டோ லூக்குடன் பயணம் செய்ததாக வெளியான தகவலை அடுத்தே, ஜாம்பவான் மரடோனாவின் இறப்பில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் போது மருத்துவர் லூக் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

மரடோனாவின் மகள்கள் டால்மா மற்றும் கியானினா ஆகியோர் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், அவர்களின் தந்தைக்கு அளிக்கப்படும் சிகிச்சையானது பொருத்தமானதா என்று கேள்வி எழுப்பினர்.

இடனையடுத்தே, விசாரணை அதிகாரிகள், நீதிமன்றத்தின் அனுமதியுடன் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

மருத்துவர் லூக் மீது இந்த சூழலில் குற்றச்சாட்டு வைக்கப்படுமா அல்லது அவர் கைது செய்யப்படுவாரா என்பது தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆனால், மரடோனாவின் முதன்மை சட்டத்தரணி கடந்த வாரம், தமது கட்சிக்காரரின் திடீர் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டிருந்தார்.

மட்டுமின்றி, மரடோனா மாரடைப்பால் அவதிக்கு உள்ளான நிலையில், மருத்துவமனையில் தகவல் தெரிவிக்கப்பட்டும், அரை மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

மேலும், மரடோனா மாரடைப்பால் அவதிக்கு உள்ளாவதற்கு 12 மனி நேரம் முன்னர் வரை அவருக்கு எவ்வித மருத்துவ சோதனைகளும் முன்னெடுக்கப்படவில்லை என புகார் அளித்திருந்தார்.

மரடோனாவின் முதன்மை சட்டத்தரணியான மத்தியாஸ் மோர்லாவின் இந்த பகீர் தகவல்கள் தற்போது, மருத்துவர் லூக் மீதான விசாரணைக்கு அழுத்தம் அளிக்கும் என்றே நம்பப்படுகிறது.