மரடோனா இறக்கும்போது அவரது வங்கிக்கணக்கில் இருந்த தொகை எவ்வளவு தெரியுமா?

கால்பந்து ஜாம்பவான் டிகோ மரடோனா இறக்கும்போது அவரது வங்கிக்கணக்கில் சொல்லும் அளவுக்கு தொகை ஏதும் இருக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்தின் முகமாக விளங்கிய மரடோனா, புதன்கிழமை தனது 60 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவரது வங்கிக்கணக்கில் எவ்வளவு தொகை இருந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி அவரது சொத்துக்களுக்கான குடும்ப உறுப்பினர்களின் போட்டியும் தலைதூக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வரலாற்றின் மிகப் பெரிய கால்பந்து வீரர் என கொண்டாடப்படும் மரடோனா இறக்கும்போது அவரது வங்கிக்கணக்கில் சுமார் 75,000 பவுண்டுகளுக்கும் குறைவாகவே சேமிப்பாக இருந்துள்ளது.

ஆனால் கால்பந்து பயிற்சியாளராக மரடோனா ஆண்டுக்கு 15 மில்லியன் பவுண்டுகள் ஊதியமாக பெற்று வந்துள்ளார்.

மேலும், பிரபல நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் ஒப்பந்தத்தில் இருந்துள்ள மரடோனா அதன்வழியாகவும் ஒரு பெருந்தொகை ஊதியமாக ஈட்டி வந்துள்ளார்.

மரடோனாவுக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளர் தெரிவிக்கையில், உலகம் கொண்டாடிய ஒரு ஜாம்பவான் ஒரு ஏழையாகவே இறந்திருக்கிறார் என்றார்.

அவரது பணம் எங்கு சென்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அவரைச் சூழ்ந்து கொண்டு அவரைப் பயன்படுத்தியவர்களிடம் பேசுங்கள் என்கிறார் Luis Ventura என்ற அந்த பத்திரிகையாளர்.

மேலும், ஒருமுறை கூட மரடோனா தமது சட்டைப்பையில் 100 யூரோவுக்கும் அதிகமாக வைத்துக் கொண்டது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவருக்கு சொந்தமான எஸ்டேட் ஒன்று இருப்பதாகவும், அதன் மொத்த மதிப்பு சுமார் 150 மில்லியன் பவுண்டுகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், கியூபா மற்றும் இத்தாலியில் முதலீடுகள், சீனாவில் கால்பந்து பள்ளிகள் என அவரது சொத்துக்களின் பட்டியல் இன்னும் உள்ளது.