இந்தியா- ஆஸி. முதல் டெஸ்டுக்கு சிக்கலா?

இந்திய கிரிக்கெட் அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பான முறையில் விளையாட இருக்கிறார்கள்.

இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் அடுத்த மாதம் 17 ஆம் திகதி தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்ரேலியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தாக்கம் சற்று குறையத் தொடங்கியதால் மைதானத்திற்குள் ரசிகர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்டு மைதானம் தெற்கு அவுஸ்ரேலியாவில் உள்ளது. இன்று தெற்கு அவுஸ்ரேலியாவில் ஐந்து பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் தெற்கு அவுஸ்ரேலியா நிர்வாகம் எல்லையை கட்டுப்படுத்தியுள்ளது.

தெற்கு அவுஸ்ரேலியா பகுதியில்தான் அடிலெய்டு உள்ளது. இதனால் இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், அடிலெய்டு டெஸ்ட் போட்டியை பொறுத்த வரைக்கும் தற்போதுள்ள நிலையே தொடரும். சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அவுஸ்ரேலியா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மேலும், வெஸ்டர்ன் அவுஸ்ரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்தில் உள்ள இந்திய தொடருக்கான அவுஸ்ரேலிய வீரர்கள் இன்று சிட்னி புறப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியான மார்ஷ் ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரின் கடைசி சுற்று போட்டி தெற்கு அவுஸ்ரேலியாவில் நடைபெற இருந்தது, அந்த வீரர்கள் தெற்கு அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியேறுகிறார்கள். இதனால் அவுஸ்ரேலியா கிரிக்கெட் போர்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

டாஸ்மானியா நிர்வாகமும் எல்லைத் தொடர்பாக கட்டுப்பாடு விதித்துள்ளது.

x