ஈடன் கார்டன் எனர்ஜியை மிஸ் செய்கிறோம்: தினேஷ் கார்த்திக்

ஐ.பி.எல். போட்டி இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஈடன் கார்டன் மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஈடன் கார்டன் ஆகும். இந்த மைதானத்தில் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் கொல்கத்தா அணி வீரர்கள் விளையாடும்போது ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருக்கும். இதுவே அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேமாக இருக்கும்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற இருப்பதால், ரசிகர்களின் எனர்ஜியை மிஸ் செய்கிறோம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘இந்த வருடம் நாங்கள் எங்களுடைய ரசிகர்கள் மற்றும் ஈடன் கார்டன் எனர்ஜியை தவற விடுகிறோம். கே.கே.ஆர். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க விரும்புகிறோம். அவர்கள் தற்போது எங்களுடன் இருக்க முடியாது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர்கள் எங்களுடைய இதயத்தில் இருக்கிறார்கள்.
இந்த வருடம் நீங்கள் எங்களுடன் இருக்க முடியாது. உங்கள் எல்லோருக்காகவும் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய கிரிக்கெட் மூலம் உங்களது முகத்தில் சிரிப்பை பார்க்க விரும்புகிறோம். நாங்கள் சரியாக கிரிக்கெட் பிராண்ட் உடன் விளையாடினால், ஒவ்வொரு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முகத்தில் சிரிப்பு வெளிப்படும் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.