முன்னதாகவே வந்திருந்தால் ஒட்டுமொத்த தொடரையும் வென்றிருப்போம்: டோனி கூறியதை நினைவு கூர்ந்தார் பும்ரா

இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பும்ரா. இவர் 2016-ம் ஆண்டு டோனியின் தலைமையில் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் அறிமுகம் ஆனார்.
நான்கு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் அடித்தது. அந்த போட்டியில் 10 ஓவரில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மணிஷ் பாண்டே சதத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
அப்போது முன்னதாகவே வந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒட்டுமொத்த தொடரையும் வென்றிருக்கலாம் என எம்எஸ் டோனி தெரிவித்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில், டோனி தலைமையின் கீழ் நான் அறிமுகம் ஆனேன். அவர் எனக்கு அதிக அளவில் நம்பிக்கை அளித்தார். அப்போதைய நிலையில் என்னுடைய பந்து வீச்சை எம்எஸ் டோனி பார்க்கவில்லை என்பது நிறைய பேருக்கு தெரியாது.
அறிமுக போட்டியில் நான் டெத் ஓவரை வீச சென்று கொண்டிருந்தேன். அப்போது டோனியிடம், நான் யார்க்கர் பந்துகளை வீசலாமா? என்று கேட்டேன். அவர் வேண்டாம் என்றார். யார்க்கர் பந்து கடினம் என்பதால், அதை என்னால் வீச முடியாது என்று அவர் நினத்தார்.
நான் அவரிடம், டெத் ஓவரில் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை என்றேன். ஆகவே, நான் என் வழியில் சென்று எனது மனதிற்கு பிடித்த வகையில் பந்து வீசினேன். அப்புறம் அவர் என்னிடம் வந்து, இது எல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் முன்னதாகவே வந்திருந்தால், நாம் ஒட்டுமொத்த தொடரையும் வென்றிருப்போம் என்றார்.
எனக்கு அறிமுகம் போட்டி என்பதால் சற்று பதற்றம் இருந்தது. கேப்டனாகிய டோனி என்னிடம், இந்த தொடரை நீங்கள் எங்களுக்கு வென்று தந்திருக்கனும் என்று கூறினார். அவர் எனக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்தார்’’ என்றார்.