முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு: எனது கனவு நனவானது- ராகுல் திரிபாதி

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. வருகிற 26 மற்றும் 28-ந் தேதிகளில் இந்த போட்டிகள் நடக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடிய அவர் 413 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். முன்னணி வீரர் களுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளது.

இந்திய அணிக்கு முதல் முறையாக இடம் பெற்றுள்ள ராகுல்திரிபாதி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் எனது கனவு நனவானது. எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு இது வாகும்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தேர்வாளர்கள் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இதை பார்க்கிறேன். எனக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இவ்வாறு ராகுல் திரிபாதி கூறி உள்ளார்.