தென்னாப்பிரிக்காவிடம் இரண்டாவது போட்டியையும் பறிக்கொடுத்த இந்தியா

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் டெல்லியில் நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் உடன் ஜோடி சேர்ந்தார். 21 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கிஷன் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக ஷ்ரேயஸ் 40 ஓட்டங்கள் அடித்தார்.

இந்திய அணித்தலைவர் பண்ட் 5 ஓட்டங்களும், பாண்டியா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 30 ஓட்டங்கள குவித்தார்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தலைவர் பவுமா 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்கா அணி சார்பாக அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 46 பந்துகளில் 81 ஓட்டங்களை குவித்தார். டேவிட் மில்லர் 20 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி 18.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐந்து இருபதுக்கு20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற நிலையில் தென்னாப்பிரிக்கா அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.