வரலாற்று வெற்றியினை பதிவு செய்த தென்னாபிரிக்கா அணி

தென்னாபிரிக்கா அணி ஆண்களுக்கான இருபதுக்கு20 போட்டியில் தமது அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்ட போட்டியினை வென்று வரலாற்றில் இடம்பிடித்தது.

இந்தியா- தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டி, டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ஓட்டங்களை குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 36 ஓட்டங்களும், ஹர்திக் பாண்ட்யா 31 ஓட்டங்களும், ரிஷப் பண்ட் 29 ஓட்டங்களை இந்திய அணிக்காக சேர்த்தனர்.

இதையடுத்து 212 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் டெம்பா பவுமா 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் அதிரடி காட்டிய பிரிட்டோரியஸ், 29 ஓட்டங்களில் வெளியேறினார். குயின்டன் டி காக் 22 ஓட்டங்களே சேர்த்தார்.

அதன்பின்னர் வான் டெர் டுஷன் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினர். பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இந்த ஜோடி, விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

கடைசி 12 பந்துகளில் 12 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ஹர்ஷல் பட்டேல் பந்துவீச வந்தார். அவர் வீசிய 19 ஆவது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் வான் டெர் டுஷன். இதனால் தென்னாப்பிரிக்க அணி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.