பந்து வீச்சில் அசத்திய ஷர்துல் தாகூர் – 229 ஓட்டங்களுக்கு வீழ்ந்த தென்னாப்பிரிக்கா

இந்தியா மந்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டக்களையும் இழந்தது. தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 35  ஓட்டங்களை எடுத்திருந்தது.

இன்று தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 229 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிக்கொடுத்தது. பீட்டர்சன் 62 ஓட்டங்களும், டெம்பா பவுமா 51 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த இன்னிங்சில் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவர் 61 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 27 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.