இந்திய அணியில் பிளவு இருப்பது உறுதியாகிறது: முன்னாள் கேப்டன் அசாருதீன் சொல்கிறார்

இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது வெவ்வேறு கேப்டன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3 வடிவிலான போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார்.

கோலியிடம் இருந்த 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோலி டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே கேப்டனாக செயல்படுவார்.

ஒயிட்பால் (20 ஓவர், ஒருநாள் ஆட்டம்) போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுவார். வீராட் கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே விலகினார்.

அதே நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து அவரை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக ரோகித் சர்மா விளையாடவில்லை. டெஸ்டுக்கு துணை கேப்டனாக இருக்கும் அவர், தசைப்பிடிப்பு காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் கேப்டனான விராட் கோலி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியானது. அவரது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் என்பதால் ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளார்.

ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக இது குறித்து வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் விராட் கோலி தலைமையில் விளையாட உள்ள டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவும், ரோகித் சர்மா தலைமையில் விளையாட உள்ள ஒருநாள் போட்டி அணியில் கோலியும் ஆடாதது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இருவருக்கும் மோதல் இருப்பதாகவும், இதனால் அணி பிளவுபட்டு உள்ள தாகவும் கூறப்படுகிறது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் கோலி அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

குடும்பத்தை காரணம் காட்டி கோலி ஒருநாள் தொடரில் இருந்து விலக்கு கேட்கிறாரா? அல்லது ரோகித் சர்மா தலைமையில் விளையாடுவதற்கு அவரின் மனநிலை இடம்கொடுக்க வில்லையா? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவருமான முகமது அசாருதீன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை விராட் கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாத தகவலை ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

கோலி ஓய்வு எடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அதற்காக சரியான நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்.

இருவருக்கும் (கோலி, ரோகித் சர்மா) இடையிலான பிளவு குறித்த யூகங்களை இந்த செயல் உறுதி செய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விட்டுக்கொடுக்காதவர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறும்போது, ‘ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து ஆடாமல் போனால் அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் பல வீரர்கள் இதுமாதிரியான நிலையில் இணைந்து ஆடி இருக்கிறார்கள்’ என்றார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, விராட் கோலி ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக வெளியான தகவல்கள் யூகங்கள் அடிப்படையிலானது.

அவர் கிரிக்கெட் வாரியத்திடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்திய அணியில் பிளவு எதுவும் இல்லை. அந்த தகவலை மறுக்கிறேன் என்றார்.