ஐ.பி.எல். 2022ல் பங்கேற்பா…? டோனி அளித்த பேட்டி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிவிப்பு வெளியிட்டார்.  இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும், டோனி தொடர்ந்து ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்டார்.  14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சமீபத்தில் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த ஆண்டு நடக்கும் 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருகிறது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னையில் பாராட்டு விழா நிகழ்ச்சி இன்று நடக்கிறது.  இதில் கலந்து கொள்ள தனி விமானத்தில் டோனி சென்னை வந்துள்ளார்.
இந்த சூழலில், அடுத்த ஆண்டு (2022) நடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்வது பற்றி டோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பேட்டியில், இதுபற்றி நான் யோசிக்க வேண்டும்.  அதற்கு நிறைய நேரம் உள்ளது.  நாம் நவம்பர் மாதத்தில் இருக்கிறோம்.  ஐ.பி.எல். 2022 போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், ஐ.பி.எல். 2022 போட்டியில் விளையாடலாமா? என்பது பற்றி முடிவு செய்வேன்.  அவசரகதியில் அந்த முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.  இதனால், டோனி, சி.எஸ்.கே.வுக்காக அடுத்த ஐ.பி.எல்.லிலும் விளையாடலாம் என சூசகமுடன் தெரிவித்து உள்ளார்.