டி20 உலகக்கோப்பை: டேவிட் மில்லர் அதிரடி – இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ‘திரில்’ வெற்றி

இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசன்கா மற்றும் குசால் பெரேரா களமிறங்கினர்.

பெரேரா 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த சரித் அசலங்கா 21 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய ராஜபக்சா 3 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிய தொடக்கவீரர் நிசன்கா 58 பந்துகளில் 3 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க அணியின் ஷம்ஸி மற்றும் ப்ரெடோரியஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் குவிண்டன் டிகாக் மற்றும் ஹெண்ட்ரிக்ஸ் களமிறங்கினர். டிகாக் 12 ரன்னிலும், ஹெண்ட்ரிக்ஸ் 11 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த வென்டர் டுசன் 16 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்துவந்த கேப்டன் பவுமா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 46 பந்துகளில் 46 ரன்கள் குவித்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 15 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த டேவிட் மில்லர் 2 சிக்சர்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார்.

இறுதியில் 19.5 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. இதன் மூலம், இலங்கை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா ‘திரில்’ வெற்றிபெற்றது. டேவிட் மில்லர் 13 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 23 ரன்களுடனும், ரபாடா 7 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 13 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.