ருதுராஜ் அரைசதம் அடிக்க மும்பைக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சி.எஸ்.கே.

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. டு பிளிஸ்சிஸ், மொயீன் அலி, அம்பத்தி ராயுடு (காயம் காரணமாக வெளியேறினார்) ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

டோனி 3 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சி.எஸ்.கே. 24 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ருதுராஸ் அபாரமாக விளையாடினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஜடேஜா 33 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார்.

ஜடேஜா ஆட்டமிழக்கும்போது சி.எஸ்.கே. 16.4 ஓவரில் 105 ரன்கள் எடுத்திருந்தது. வெய்ன் பிராவோ அதிரடியாக விளையாடி 8 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை ஸ்கோர் 150 ரன்னை நெருங்கியது.

41 ரன்னில் அரைசதம் அடித்த ருதுராஜ் 58 பந்தில் 88 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரென்ட் பவுல்ட், ஆடம் மில்னே, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.