கடைசி வரை விறுவிறுப்பாக நடந்த ஆட்டம்… நெல்லை ராயல் கிங்ஸ் த்ரில் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 165 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய ஜெகதீசன் 95 ரன்கள் விளாசினார். சசிதேவ் 20 ரன்களும், ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் 19 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக கேப்டன் பாபா அபராஜித், சூர்யபிரகாஷ் ஆகியோர் களமிறங்கினர். சூர்யபிரகாஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் அபராஜித், 55 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார்.
விக்கெட் வீழத்திய உற்சாகத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள்

அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு இணைந்த பிரதோஷ் ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ் இருவரும் அதிரடியாக ஆடி, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரஞ்சன் பால் அரை சதம் கடந்து அதிரடியை தொடர்ந்தார்.

கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், 3வது பந்தில் ரஞ்சன் பால் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 160. அதன்பின்னர் 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்து வைடு ஆனது. அடுத்த பந்தில் பாபா இந்திரஜித் அபாரமாக சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.