உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையின் அறிவுறுத்தலால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடிவு செய்தேன் என பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தை ஜெரார்டுவை பார்க்க கடந்த ஆகஸ்டு மாதம் நியூசிலாந்துக்கு சென்றார். ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆடினாலும் அவரது பூர்விகம் நியூசிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தினருடன் 5 வாரங்கள் தங்கியிருந்து தந்தையை கவனித்துக் கொண்ட ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக கடந்த வாரம் துபாய் சென்றார். ரூ.12½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் ஸ்டோக்ஸ் 6 நாள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்ததும் களம் இறங்குவார். 29 வயதான ஸ்டோக்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘கிறைஸ்ட்சர்ச் நகரில் எனது தந்தை, தாய், சகோதரரிடம் இருந்து விடைபெற்றது கடினமாக இருந்தது. ஒரு குடும்பமாக இது எங்கள் எல்லோருக்கும் கடினமான காலக்கட்டமாகும். முடிந்த அளவுக்கு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம்.

மீண்டும் கிரிக்கெட் களம் திரும்ப ஊக்கப்படுத்தியது எனது தந்தை தான். ‘உனக்கு என்று கடமைகள் (விளையாடுவது) உள்ளன. அதை சரியாக செய்ய வேண்டும்’ என்று தந்தை என்னிடம் கூறினார். எனது பெற்றோரின் அன்பும், ஆசியுடனும் அங்கிருந்து கிளம்பினேன்’ என்றார்.