மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகிய மலிங்க

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பேட்டின்சன் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2020-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள அனைத்து ஐபிஎல் அணிகளும் (சென்னை தவிர்த்து) பயிற்சியைத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இவருக்குப் பதிலாக மாற்று வீரராக அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனை மும்பை அணி தேர்வு செய்துள்ளது. வார இறுதியில் அவர் மும்பை அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆரம்பத்தில் சில ஆட்டங்களில் மலிங்க விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பேட்டின்சன் முன்னதாக 2011-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தார். 3 சீசன்களுக்கு கொல்கத்தா அணியிலிருந்தபோதிலும் ஒரு ஆட்டத்தில்கூட அவர் விளையாடும் லெவனில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.