செப்டம்பர் மாதத்தில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடந்தது.

கோப்புப்படம்

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி கடந்த மாதம் 9-ந்தேதி தொடங்கியது. சென்னை, மும்பையில் போட்டி முடிந்த நிலையில் டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கும்போது 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சகா (ஐதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி), ஆகியோருக்கு பாதிப்பு இருந்தது. அதோடு சி.எஸ்.கே. அணியை சேர்ந்த பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.

இதனால் கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டியை பாதியில் நிறுத்தியது.

இந்த ஐ.பி.எல். சீசனில் 29 ஆட்டங்கள் முடிந்திருந்தது. 31 ஆட்டங்கள் இன்னும் எஞ்சியுள்ளன. எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பர் மாதம் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பு இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து இறுதி முடிவு செய்யப்படும்.

இதற்கிடையே ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இங்கிலாந்தில் உள்ள 4 கவுண்டிங் கிளப்புகள் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அர்ஜூன டி.செல்வா கூறியதாவது:-

எங்களால் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடியும். இதற்காக செப்டம்பரில் போட்டியை நடத்த மைதானங்கள் தயாராகிறது.

ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை நடத்துவதற்கான வாய்ப்பு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கையை புறக்கணிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டும் ஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முன்னுரிமை கொடுத்தது.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தவே கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

x