டெல்லியுடன் இன்று மோதல் – பஞ்சாப் கிங்ஸ் அணி பதிலடி கொடுக்குமா?

ஐ.பி.எல். போட்டியில் 24-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

டெல்லியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி டெல்லி, கொல்கத்தாவை வீழ்த்தி இருந்தது.

பஞ்சாப், சென்னை, பெங்களூர், மும்பை அணிகளிடம் தோற்றது. ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் ராஜஸ்தான் உள்ளது.

ஐதராபாத் அணி ஒரு வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப்பை மட்டும் தோற்கடித்து இருந்தது. கொல்கத்தா, பெங்களூர், மும்பை, டெல்லி , சென்னை அணிகளிடம் தோற்றது.

இதனால் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டு வில்லியம்சனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐதராபாத் அணி ராஜஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் – லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப்பை ஏற்கனவே 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் டெல்லி அணி நம்பிக்கையுடன் விளையாடும்.

பஞ்சாப் அணி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே டெல்லியிடம் தோற்றதற்கு இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் 18-ல், டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.

x