ஹராரே டெஸ்டில் பவாத் ஆலம் சதம் – 2ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 374/6

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 59.1 ஓவர்களில் 176 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ராய் கையா 48 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் அணி சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் எடுத்தது. இம்ரான் பட் 43 ரன்னுடனும், அபித் அலி 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அபித் அலி 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்தது.

சதத்தை தவறவிட்ட இம்ரான் பட்

அடுத்து இறங்கிய அசார் அலி 36 ரன்னும், கேப்டன் பாபர் அசாம் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர்.  சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்ரான் பட் 91 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய பவாத் ஆலம் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார். அவருக்கு மொகமது ரிஸ்வான் ஒத்துழைப்பு கொடுத்தார்.

ரிஸ்வான் 45 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் டக் அவுட்டாகி வெளியேறினர். சிறப்பாக ஆடிய பவாத் ஆலம் சதமடித்து அசத்தினார்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 120 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்துள்ளது. பவாத் ஆலம் 108 ரன்னுடனும், ஹசன் அலி 21 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.  ஜிம்பாப்வே அணியை விட 198 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்.

ஜிம்பாப்வே அணி சார்பில் டொனால்ட் டிரிபனோ 3 விக்கெட் வீழ்த்தினார்.

x