சிஎஸ்கே-வுக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 7 ரன் எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டேவிட் வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. வார்னர் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக விளையாடினார்.

மணிஷ் பாண்டே ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர். இதன்காரணமாக மணிஷ் பாண்டே 35 பந்திலும், வார்னர் 50 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்களும், மணிஷ் பாண்டே 46 பந்தில் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 4-வது வீரராக களம் இறங்கிய கேன் வில்லியம்சன் ஷர்துல் தாகூர் வீசிய 19-வது ஓவரில் தொடர்ந்து 4,6,4,4 என விரட்டினர். இதனால் சிஎஸ்கே அந்த ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்தது. இதனால் ஐதராபாத் 150 ரன்களை தாண்டியது.

கடைசி ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

கேன் வில்லியம்சன் 10 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேதர் ஜாதவ் 4 பந்தில் 12 ரன்கள் எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டும், சாம் கர்ரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

x